Sunday, July 28, 2013

ரியல் எஸ்டேட்களாக மாறிவரும் விவசாய நிலங்கள்

                   மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் பொதுவுடமை ஆட்சிகளின் போது அனைத்து குடும்பங்களுக்கும் விவசாய நிலங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. வீரத் தெலுங்கானா போராட்டத்தாலும், ஏழை விவசாயிகள் ஏராளமான நிலங்களைப் பெற்றனர். ஆயிரத்து தொள்ளாயிரங்கள் வரை நிம்மதியாக வாழ்ந்த விவசாயிகள் தற்போது 21 -ஆம் நூற்றாண்டில் மட்டும் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தை ஏற்படுத்தியது இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் தான். விலை மதிப்பு மிக்க நவீன ரக கார்கள் வாங்குபவர்களை கூவி, கூவி அழைத்து குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் வங்கிகள், விவசாயத்திற்கு கடன் கேட்பவர்களை காத்துக் கிடக்கத் தானே சொல்கிறது. அப்படியே விவசாயத்திற்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்தாலும், அந்த கடன் பணக்காரர்களுக்கு தான் கிடைக்கிறது. உதாரணமாக முகேஷ் அம்பானிக்கு குளிர்பதன கிட்டங்கி அமைக்க வெறும் 4 சதவீத வட்டியில் விவசாய கடன் கொடுத்துள்ளது ஒரு வங்கி. வேறு வழியின்றி ராசி வட்டி, கந்து வட்டி என்று ஏழை விவசாயிகள் போகின்றனர். வட்டி மேல், வட்டி கட்ட முடியாமல் தானே அவமானத்தால் சாகிறார்கள்.       
      தமிழகத்தில் விவசாய நிலத்தின் பரப்பு, கடந்த 10 ஆண்டுகளில், 17  லட்சம் ஹெக்டர் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் விவசாய பரப்பு மற்றும் விளைபொருட்களின் உற்பத்தி குறைந்து வருகிறது. என்ன காரணம், பருவமழை முரன்பாடுகள், ஆறு மற்றும் ஏரி  பாசன திட்டங்களில் உள்ள கோளாறு, மழைநீரை சேமிக்கும் ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி புனரமைக்காத்து,  நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள், விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, வறட்சி மற்றும் வெள்ளங்களால் ஏற்படும் பாதிப்புகள், விவசாய சாகுபடி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது, இடைத்தரகர்கள், ஒரு கிலோ அரிசி விற்பது 45 ரூபாய். ஆனால் 100 கிலோ நெல் மூட்டை விவசாயிகளிடமிருந்து வாங்குவது 1250 ரூபாய். சாகுபடி பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பது இடைத்தரகர்கள். விவசாயம் குறித்த தொழில் நுட்பம், உபகரணங்கள், கல்வி ஆகியவை விவசாய குடும்பங்களுக்கு கிடைக்காதது, இவற்றுக்கெல்லாம் மேலாக விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாறும் கொடுமை. ஒரு படி நெல் கூலியாக கேட்டதற்கு 44 பேரை உயிருடன் எரித்த தஞ்சை வெண்மணி முதல் உத்தபுரம் வரை சாதிய ஒடுக்குமுறைகள் ஒரு பக்கம் தலைவிரித்து ஆடுகிறது.
பாரம்பரிய விதைகளை விட்டுவிட்டு மரபனு மாற்றப்பட்ட நெல், பருத்தி விதைகளை காசு கொடுத்து வாங்கியதன் விளைவு மான்சாண்டோ கம்பெனி விருப்பப்படியே விவசாயிகள் இனி விவசாயம் செய்யமுடியும். விலையும் மான்சாண்டோ விருப்பப்படிதான். 90 களுக்கு முன் விவசாயம் செய்த குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 டன் உணவு தானியத்தை உற்பத்தி செய்தார்கள். வீட்டு வாசலில் யார் வந்து உதவி என்று கேட்டாலும் தயங்காமல் உடனடியாக ஒரு படி நெல்லோ, கம்போ,கேழ்வரகோ எடுத்து கொடுத்தனர். இன்று இலவச அரிசி கிடைக்குமா என்று  ரேஷன் கடையில் கியூவில் நிற்கும் அவலம் தான் இந்த தேசத்தை ஆண்ட ஆட்சியாளர்களால் தர முடிந்துள்ளது.

குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள் தினசரி காலி குடங்களுடன் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தாத நாளே இல்லை. ஒரு லிட்டர் பால் 24 ரூபாய், 1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய். குடிக்கும் தண்ணரை கூட மக்களுக்கு போதிய அளவு வழங்க முடியாதது தான் ஆட்சியாளர்களின் சாதணை. கரும்பு, நெல், தேங்காய், தக்காளி, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வன ஓரங்களில் உள்ள விவசாயிகளின் சாகுபடி பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த தகுந்த வேலி அமைக்க வேண்டும். மலைவாழ் மக்கள் வனங்களில் விளையும் விளை பொருட்களை எடுத்து பயன்படுத்தும் அதிகாரத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை குறித்து கடலூரில் நடைபெறும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33 வது மாநாடு ஆய்வு செய்கிறது. மாநாடு சிறக்கட்டும் விவசாயிகளின் வாழ்க்கை விடியட்டும்.       

No comments:

Post a Comment