Sunday, July 28, 2013

விவசாய சாகுபடியை உயர்த்த
புதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்
திருவண்ணாமலை விவசாயிகள் எதிர்பார்ப்பு
       

நெல் சாகுபடி மற்றும் அரிசி பதனிடுதல் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியத் தொழில்களாகும். பதினெட்டு சிறு தடுப்பணைகள், 1965 ஏரி பாசனங்கள் மற்றும் கிணற்று பாசனங்கள்  மூலம் சுமார் 1 லட்சத்து, 12 ஆயிரத்து 13 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யபடுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு நகருக்கு அருகிலுள்ள புளியரம்பாக்கத்தில் அரசு நெல் அரவை ஆலை உள்ளது.  மாவட்டத்திலேயே பெரிய அரிசி ஆலை ஆகும். மாவட்டத்தில் ஆரணி மற்றும் போளூர் வட்டங்களில் சுமார் 300  அரிசி ஆலைகள் உள்ளன. களம்பூர் பொன்னி என்னும் ஒரு வகை அரிசி இம்மாவட்டத்தின் களம்பூர் என்னுமிடத்தில் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற அரிசி வகை ஆகும். செய்யாரில் உள்ளது போல் ஆரணி, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அரிசி ஆலைகள் அமைத்து, விவசாயிகளின் சாகுபடி நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நெல் சாகுபடி தவிர, கரும்பு சாகுபடியும், நிலக்கடலை சாகுபடியும் பரவலாக செய்யப்படுகிறது. நிலக்கடைலை சாகுபடியை மேம்படுத்த ஏற்கெனவே இயங்கி வந்து இடையில் நிறுத்தப்பட்டுள்ள, அரசு டான்காப் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும். அதேபோல் விவசாயிகளின் கரும்பு பணம் பாக்கி வைத்துள்ள அருணாச்சலா சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து பணத்தை பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், கரும்பின் கொள்முதல் அதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் எனறும் உழவர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த விவசாய சாகுபடியின் பாசனத்திற்காக,   திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு  சாத்தனூர் அணை முக்கிய நீர் ஆதாரமாக அமைந்திருக்கிறது. அணையின் பாசனத்தை நம்பி, விழுப்புரம் மாவட்டத்தில் 30,537 ஏக்கர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 19,463 ஏக்கர் உள்பட மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறுகிறது. 



     திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் 7,543 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் விவசாய சாகுபடியும் அணையின் தண்ணீரை நம்பியே உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 48 ஏரிகளும் சாத்தனூர் அணையின் மூலம் நிரம்பும் வாய்ப்புள்ளது.
அதேபோல், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கனவுத்திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தின் முதற்கட்ட பணி ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கியது. திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது நந்தன் கால்வாய் திட்டம். ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் துரிஞ்சாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து, அதிலிருந்து கால்வாய் மூலம் ஏரிகளுக்கு நீரை திருப்ப திட்டம் வடிவமைக்கப்பட்டது. அதற்கான திட்ட ஆய்வு அறிக்கை அளிக்கப்பட்டும், 10 ஆண்டாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், 14.50 கோடி மதிப்பில் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே சம்மந்தனூர் கிராமத்தில் உள்ள கீரனூர் அணைக்கட்டில் இருந்து தடுப்பணை அமைக்கவும், ஏற்கனவே ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள பழைய நீர்வரத்து கால்வாய்களை 5 மீட்டர் அகலத்தில் தூர்வாரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில்  நிறைவேற்றப்பட்டால் சுமார் 9 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் விவசாய சாகுபடி பயன்பெறும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செண்பகத்தோப்பு அணை, மிருகண்டா அணை ஆகியவற்றின் நீர் வெளியேற்றும் கால்வாய்களை சீரமைப்பதன் மூலம் விவசாய சாகுபடியை பெருக்க முடியும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.




No comments:

Post a Comment