Saturday, June 22, 2013

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு                           பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு ஏன் மாறவில்லை?                                                      நம்ம பாரத்த்தில் சோத்துச் சண்டை ஏன் தீரவில்லை?

நுகர்வு கலாச்சாரம் :


               ஒரு தேசத்தின் நுகர்வுக் கலாச்சாரம் எத்தகையதோ, அதற்கேற்றவாறே நாட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இருக்கும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பொருட்கள், உடை, சோப்பு, ஷாம்பு, பற்பசை, வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களையும் எப்படி வாங்க வேண்டும், எங்கு வாங்க வேண்டும் என்று பெரும்பாலும் நாம் முடிவு செய்வதல்ல. நம் அறிவையும், புத்தியையும் மழுங்கடித்து நம் மீது ஒரு முடிவு திணிக்கப்படுகிறது.
           அப்படி திணிக்கும் கூட்டம் மிக அறிவாற்றல் கொண்ட கூட்டம் என்பது அர்த்தமல்ல. அயோக்கியதனமான கூட்டம். பேராசைக்கூட்டம். நாடு சுடுகாடானாலும் நமக்கென்ன, லாப வெறியே முக்கியம் என நினைக்கும் ஒரு ஈனமான கூட்டம் என்பது தான் உண்மை.

பெருகிய திண்பண்டம் :

                   
நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் அதை நாகரிகம் ஓடி வந்து கெடுக்கும்னு ஒரு பாட்டு உண்டு. நம்ம தமிழகத்துல விதவிதமான உணவு பண்டங்கள் அந்தந்த ஊருக்கே பெருமை சேர்க்கும். திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, திருப்பதி லட்டு,  திருவில்லிப்புதூர் பால்கோவா,  பழனி பஞ்சாமிர்தம், கல்லிடைக்குறிச்சி அப்பளம், என்று ஒவ்வொரு பகுதியின் தனித்தன்மைக்கேற்ப சுவையுடன் கூடிய உணவு வகைகள் விளங்கி வந்தன. முறுக்கு,  கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், வெல்லம், ஆரஞ்சு மிட்டாய் போன்ற பொருட்கள் தான் ஒரு காலத்தில் கடைகளில் திண்பண்டங்களாக விற்கப்பட்டன.
                   வீட்டிற்கு விருந்தாளி வந்தால் பன்னீர் சோடா, அஜீரணம், வயிற்று வலி என்றால் உப்பு சோடா அவ்வளவே. இப்போ, எந்த கிராமமாக இருந்தாலும், லேஸ், குர்குரே, பிங்கோ டேங்கில்ஸ், ஸ்னிக்கர்ஸ், சாக்கோ பார், மானங்கெட்ட கேட்பரி டெய்ரி மில்க், வேப்பர்ஸ், பல்வேறு சுவைகளில், மணங்களில் வெளிநாட்டு சாக்லேட்ஸ் என நூற்றுக்கணக்கான திண்பண்டங்கள் விற்கப்படுகிறது.

பாரம்பரிய பாணம் :


           நீராகாரம், மோர், சுக்குதண்ணி, பதனி, எளனி போன்ற உடல்நல பானங்களை பருகிவந்த மக்கள், கோக், பெப்சி, பேன்டா ன்னும், மிரண்டா உள்ளே போனால் கலாட்டா வெளியே வரும் என்கிற கருமங்களையெல்லாம் பருகிவருகின்றனர். இது பரவாயில்ல, நிலத்தடி நீரை விஷமாக்கிவிட்டு, மருந்து போட்டு வடிகட்டிய, மாதக்கணக்கில் கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி குடிக்கும் அவலம் நிலவுகிறது. பாக்கெட்களில் விதவிதமாக ரெடிமேட் பழச்சாறுகள். பாலும், குடிநீரும் ஒரே விலைக்கு விற்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் தேசிய நீர்கொள்கை சட்டம் வேற வரப்போகுதாம். நாடு வௌங்கின மாதிரிதான்.
           குந்தைகளை ஆரோக்கியமாக உயரமாக வளர்க்க வேண்டுமானால் ஹார்லிக்ஸ், காம்ப்ளான், பூஸ்ட் கொடுக்க வேண்டும் என்று எங்கள் சோதனையில் தெரியவந்தது என ஆளாளுக்கு ஒரு அயோக்கியதனமான விளம்பரம்.  ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன் வளர்ந்த எந்த குழந்தைகளும் ஆரோக்கியமாகவும், உயரமாகவும் வளரவில்லையா?,  
                   அட கோமாளி பசங்களா,  இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவங்களோட பேரை கூடநினைவில் வைத்துக் கொள்ள வக்கில்லாமலா நம் வீட்டு குழந்தைகளை வளர்க்கிறோம். அதை நினைவில் வைத்துக்கொள்ள காம்ப்ளான் மெமரி சார்ஜஸ் சாப்பிட வேண்டுமாம். ஒவ்வொரு வயதிற்கும் ஒரு மாடல் (ஆனால் எல்லா டப்பாவிலும் அதே உலுத்து போன மாவு தான் இருக்கும் என்பது வேறு விஷயம்)
                 
மாறிய உணவு பழக்கம் :


                                        எக்ஸ்பிரஸ் வேக வாழ்க்கை முறை, நேரமின்மை, அவசர கோலத்தின் விளைவாக, தோசை மாவு பாக்கெட், ரெடிமேட் சப்பாத்தி, பாக்கெட்டில் குழம்பு, பிரைட் ரைஸ், பீசா, பர்கர், ஸ்பிரிங்ரோல் என ரெடிமேட் உணவு வகைகளின் ஆக்கிரமிப்பு அனைத்து ஊர்களிலும் அலங்கரிக்கிறது. கே.எப்.சி சிக்கனுக்கென்றே ஒரு ரசிகர் மன்றம் உள்ளது.
                         கே.எப்.சி சிக்கன் பீசும், கோலாவும் மட்டும் ஒரு வேளை உணவாக பலர் சாப்பிடுவதை பார்க்கிறோம். பாக்கெட் செய்யப்படும் உணவு பண்டங்கள், கெட்டுப் போகாமல் இருப்பதற்கும், கவர்ச்சியாக தெரிவதற்கும் அதில் செயற்கையான வண்ணக் கலவைகள், அதிகப்படியான உப்பு, ரசாயன பவுடர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் மனித சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இந்தியாவில்சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர் சிறுநீரகம் செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் திட்டமிட்டு படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

பறிபோன பாரம்பரிய விதைகள் :


                  தமிழ்நாட்டில் மட்டும் 2 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. குழியடிச்சான் சம்பா, மாப்பிள்ளை சம்பா,  குடவாலை சம்பா, கல்லுண்டை சம்பா,  கவுனி அரிசி, ஆற்காடு கிச்சடி, வையக்குண்டா, குதிரைவால், தங்கச்சம்பா, டொப்பிச்சம்பா, சீரகச்சம்பா, ஆனைக்கொம்பன், கார்சம்பா, கார்த்திகைச்சம்பா, ஆத்தூர் கிச்சடி, சிறுகமணி, செங்காரி, பூனைக்காரி, கட்டைச்சம்பா, பிசாளம் போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்துவிட்டன. தற்போது,  ஐ.ஆர் 20, பொன்னி, டீலக்ஸ் என்ற கலப்பு ரகங்கள் மட்டுமே நம் பசிக்கு சோறாகிறது.
         தக்காளி, அவரை, முருங்கை, மிளகாய், கத்திரி, வெண்டை, மிளகாய், பருத்தி, தேங்காய், வாழை என அனைத்து வேளாண் பொருட்களும் பாரம்பரிய விதை ரகங்கள் அழிந்து போய், உயிரி தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரகங்களும், ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கிய மலட்டு விதைகளும் தான் நம்மிடம் மிஞ்சியுள்ளது. இப்படி விளைபவை புற்றுநோயை ஏற்படுத்தும், ரத்த அழுத்தத்தை உயர்த்தும் என்றெல்லாம் எச்சரிக்கைகள் இருந்தாலும் அவை புறக்கணிக்கப்பட்டு "புதிய கண்டுபிடிப்புகள்' என்று கூறி இந்திய விவசாயத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

ரசாயன பொருட்களால் வரும் கேடு :

                              நாம் பாரம்பரிய முறைகளை கைவிட்டு ரசாயன உரங்களையும், வேதியியல் பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் நம் உடமையாக ஆக்கிக்கொண்டோம். ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் மானியம் கிடைக்கிறது என்ற காரணத்திற்காகவும் அதனை பயன்படுத்துவதால் மகசூல் கூடுகிறது என்ற எண்ணத்தினாலும் நவீன கால வேளாண்மையான ரசாயனங்களை மையமாக கொண்ட வேளாண்மை நம்மை நன்கு ஆக்கிரமித்து கொண்டது.
                       இதன் விளைவாக நம் வளமான மண் மலடாகியது, பொன் விளையும் பூமி இன்று புண்ணாகியது. ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நாம் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம் நீரழிவு, புற்றுநோய், மலட்டுதன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு,  இருதய நோய்கள், புற்றுநோய்கள், பற்களில் வரும் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுகளில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான். இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது.

உணவு பொருட்களின் விலை உயர்வு :

                                    மரபனு மாற்றப்பட்ட விதைகளாலும், உரம் மற்றும் பூச்சி கொல்லிகளால் மண் மாசுபட்டதாலும், உணவு பொருட்களின் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு என பெருமையாக பாடிய நிலை மாறி, இன்று புஞ்சையும் இல்லை, நஞ்சையும் இல்லை. சிறப்பு பொருளாதார மண்டலம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணங்களால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
 
மருத்துவ தன்மை :

                 நமது பாரம்பரியம் என்பது, உணவை மருந்தாகக் கொண்டிருந்தது. உடல் உழைப்பை அதிகமாகக் கொண்ட வாழ்க்கை முறை இருந்தது. கேழ்வரகு,  கம்பு, சோளம்,  சாமை வரகு, கொள்ளு, தினை ஆகிய சிறு தானியங்கள் பழக்கத்தில் இருந்தது. சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளிட்ட நோய்கள் இயற்கையாக கட்டுப்படுத்தப்பட்டன. சிறு, சிறு உடல் உபாதைகளுக்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, பூண்டு, வேப்பிலை, வெத்தலை, இஞ்சி உள்ளிட்ட பல மூலைகைகளை பயன்படுத்தினோம்.
              இன்று வியர்குரு வந்தாலும், விக்கலெடுத்தாலும் ஆங்கில மருந்துகளை தேடி ஓடுகிறோம். பிளட் டெஸ்ட், எக்ஸ்ரே, இசிஜி, அல்ட்ரா ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், பெட் ஸ்கேன், எக்கோ டெஸ்ட்,  என பட்டியல் நீண்டு கொண்டே போகும். இ.என்.டி, ஆர்த்தோ, நியூராலஜி, பாத்தாஜி, ஆப்தமாலஜி, நெப்ராலஜி, கியன்ஸ்பாலஜி, சர்ஜரி, அனஸ்தீசியாலஜி, கார்டியாலஜி என நோய் பிரிவுகள் நம்மை பயமுறுத்துகிறது.
             இன்றைய அலோபதி மருந்துகள் அரசியலாக்கப்பட்டு பல மடங்கு லாபம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் 100 ரூபாய்க்கு விற்கும் மருந்தை, நமது அரசுத்துறையே தயாரித்தால் 3 ரூபாய்க்கு விற்க முடியும்.
                ஆனால் அரசு செய்வதில்லை. அதில் அரசியல் உள்ளது. ஏகாதிபத்திய நாடுகளிடம் இருக்கும் மருந்துக்கு ஏற்றவாறு நம் நாட்டில் நோய் இருக்க வேண்டும் என்பது தொலை நோக்கு திட்டம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  மாறிவரும் உணவு பழக்கமும் இந்த பாதிப்புகளுக்கு ஒரு காரணம்.

No comments:

Post a Comment