சங்கம் வளர்த்த செங்கம்
காரியுண்டி, சேயாறு, நவிரமலை
மலைக்க வைக்கும் மலைபடு கடாம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரின் சங்க கால பெருமை, பெருவியப்புக்குறிய
பொருளாய் விளங்குகிறது.
சங்ககாலத் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்.
ஆகும். (கூத்தராற்றுப்படை) என்றும் ஒரு பெயர் உண்டு. இப்பாடலை இயற்றியவர், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகனார் என்ற
புலவர்.
வள்ளலாகிய நன்னனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன் ஒருவன், வழியில் கண்ட
தன்னையொத்த வறுமை நிலையில் இருந்த கூத்தனுக்கு நன்னன் நாட்டு இயல்பையும், மலை வளத்தையும், நன்னனின் கொடை
வளத்தையும் சொல்வதாக இந்நூலைப் பெருங்கௌசிகனார் பாடியுள்ளார்.
நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு
பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத்
திறத்தையும் புகழ்ந்து பாடும் இந்த நூல் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள்
பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன.
ஆசிரியரின் உவமைகளுக்கு சில எடுத்துக்காட்டு
1. வானத்தின்கண் மிளிரும் கார்த்திகைமீன்கள் போன்று வெள்ளிதாக மலர்ந்து
திகழும் முசுண்டை
2. விளையாட்டுப் போர்
நிகழ்த்தும் யானைக் கன்றுகளின் கைகள் பிணைந்தாற் போன்று பிணைந்து தோன்றின தினைக்
கதிர்கள்
3. தயிர் சிதறிக் கிடந்தாற் போன்று அவரை மலர்கள் உதிர்ந்து கிடந்தன
4. வேற்படைகள் முதுகிட்டாற்
போன்று கருப்பங்காடுகள் காற்றாலே ஒருபுறமாய்ச் சாய்ந்து தோன்றின
5. பிடியின் முழந்தாள்
போன்று கவலைக் கொடிகள் கிழங்கு வீழ்த்தன
6. ஆகுளியென்னும் பறை
முழங்கினாற்போன்று பேராந்தைப்பேடும் சேவலும் இரட்டும்
7. முழவுகள் தூங்கினாற்போன்று பலாக்கனிகள் தூங்கும்
8. இருள் துண்டுபட்டுக் கிடந்தாற்போன்று பன்றி கிடக்கும்
9. நெடிய மரம் விழுந்து கிடந்தாற்போற் கிடக்கும் பாம்புகள்
10. பண்டமாற்றிப் பெற்ற கலப்பு நெல்லின் பன்னிற அரிசிபோன்று பன்னிற யாடுகள்
தோன்றும்
11. துடிக்கண் போன்ற வரால்
மீன்துண்டு
12. பண்களை மாறிமாறிப் பாடுங்கால் புதிய புதிய இன்பந் தோன்றச்செய்வது போலப்
புதிய இன்பங்களை மாறிமாறித் தரும் பொழில்களும் பள்ளியும்
13. நன்னன் நகரத் தெருக்கள் பேரியாறு போற் கிடந்தன
14. எஞ்ஞான்றும் திருவிழா
நாட்போன்று ஆரவாரமுடைத்து அந்நகர் என்றும், கடலும் முகிலும் சேர்ந்து
முழங்கினாற் போன்று முழக்கமுடைத்தென்றும், மலைத்தொடர் போன்றும் முகில் நிரைபோன்றும் அந்நகரத்தே
மாடங்கள் ஓங்கி நின்றன என்றும், இன்னோரன்ன அரியபல உவமைகளை இந்நூலில் கூறியுள்ளார்.
குறிஞ்சி, முல்லை, மருதம், முதலிய நிலங்களிலே வாழும் மாந்தர் தொழிலும்,
அவர்கள் விருந்தோம்ல்
சிறப்பும், அவர்கள் உணவின் இயல்பும், பழக்க வழக்கங்களும் நன்கு
விளக்கப்பட்டுள்ளது.. காட்டினுள்ளே எழும் பல்வேறு ஓசைகளையும், தனித்தனியாக கூறி,
இறுதியாக
அவ்வோசைகளைத் தொகுத்து மலைபடுகடாம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பாட்டுடைத்தலைவன் வரலாறு
பத்துப் பாட்டின் இறுதியில் உள்ள மலைபடுகடாம் என்னும் நூலின் தலைவன் நன்னன்
வேண்மான் என்னும் வள்ளல். இம் மன்னர் ஆட்சிசெய்த நாடு பல்குன்றக் கோட்டம்
எனப்படும். பல்குன்றக் கோட்டம் என்பதனை குன்று சூழிருக்கை நாடு என இந்நூலாசிரியர் கூறியுள்ளதாலும்,
பல்குன்றக் கோட்டத்துச்
செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன். என பெயர் விளங்கிற்று.
தொண்டை நாட்டில் 24 (இருபானான்கு) கோட்டங்களுள், பல்குன்றக் கோட்டம்
என்பது ஒன்று. இப்பகுதியில், குன்றுகள் மிகுந்திருந்தமையால், அப் பெயர் பெற்றது.
தமிழ்நாட்டின் வட எல்லையாகிய வேங்கடமலையும், இக்கோட்டத்தில் உள்ளது என்பதை,
பன்குன்றக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம் என்னும் கல்வெட்டுக்களால்
அறியலாம். செங்கண்மா என்னும் நகரிலிருந்து இம் மன்னன் செங்கோ லோச்சினான்.
இந்நகரம், திருவண்ணாமலைக்கு மேற்கு திசையில் உள்ளது. இக்காலத்தில், செங்கண்மான் எனவும், செங்கமா
எனவும், செங்கம் எனவும் வழங்கப்படுகின்றது. செங்கம் நகரில், பண்டைக் காலத்தில் அகழி, கோட்டை, பெரியவீதி, கடைத்தெரு, குறுந்தெரு, சிங்காதனமமைந்த இராஜியசபை உள்ளிட்ட அம்சங்கள் அமைந்திருந்தன.
பண்டைக்காலத்தில் சிறந்து விளங்கிய, வேள்குடி, ஆய்குடி, எவ்விகுடி, அதியர்குடி முதலிய குடிகளுள் ஒன்றாகிய வேளிர் குடியில்
பிறந்தவன் ஆதலான், நன்னன் வேண்மான் என்றும் அழைக்கப்பட்டான்.
நன்னன் தன் நாட்டில்
அமைந்த நவிரமலையைப் பெரிதும் விரும்பி,
அம் மலையில் உறையும் காரியுண்டிக் கடவுளாகிய சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு வந்தான். அந்த மலையிடத்தில் யானை, தேர், குதிரை, காலாள்
முதலிய நால்வகைப் படைகளையும் வைத்திருந்தான். மேலும் காட்டினுள்ளும் தன் படைகளை அமைத்திருந்தான். பகைவர் எதிர்த்து நிற்க இயலாத அரண்களை பெற்று இருந்தான் எனினும், புலவர் முதலிய கலைஞர்கள் இயல்பாக அரண்மனைக்குச் செல்லுதல் வழக்கம் என்பதும் இந்
நூலால் அறியலாம்.
மலையில் நவிரமலைபோன்று நன்னன்
நாட்டில் சிறந்த ஆறு சேயாறாகும். இந்த பெரிய
ஆறு தன் இருகரைமருங்கும் செழித்தோங்கிய
பூம்பொழில்களையும், கனிதரும் துடவைகளையும் உடைத்தாய், பல்காலும் நீர்ப் பெருக்கெடுத் தோடுவதாய்ச் சிறந்து
விளங்கிற்று.
இந்த நவிரமலை, காரியுண்டி கடவுள்
சிவன், சேயாறு இவைகலெல்லாம், பின்காலங்களில் திரிசூலகிரி, பர்வதகிரி, என்றும்,
ஸ்ரீ காளகண்டேசுவரர்
என்றும், சண்முகநதி
என்றும், தற்போது மல்லிகார்ஜீனர், பிரம்மராம்பிகை என்று மருவியுள்ளது.
ஓசைகள் இருபது
மலைகாடுகளில் கேட்கும் ஓசைகள் இருபது வகை என்று ஆசிரியர் கூறுகிறார்.
அருவி நீரில்
விளையாடும் பெண்களின் ஓசை, யானையை வளைத்து பிடிக்கும் ஓசை, பன்றிகளால் தாக்கப்பட்டவர்களின்
அழுகை ஒலி, புலிபுலி என்று கூறினால்
வேங்கை மரக்கிளைகள் வளைந்து கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அதனால்
பூக்கொய்வார் இங்ஙனம் கூறுவது மரபாம். வேங்கை மலர் மரத்தின் கிளைதோறும்
செந்நிறத்தில் கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும். அதை அணிந்து கொள்ள விரும்பும்
குறமகளிர், "புலிபுலி" எனக் கூறி ஆரவாரம் செய்யும் ஓசை,
யாணைகளின் ஓசை, குரங்குகளின் ஓசை, தேன் எடுக்கும் மக்களின் ஓசை, குறவை
கூத்தின் ஒசை, ஆறுகளின் ஓசை, மாடுகளின் ஓசை, திணை குற்றும் பெண்களின் பாடல் ஒசை,
பன்றிப்பறை அடிக்கும் ஓசை என பல்வேறு ஓசைகள் காடுகளில் கேட்பதால்,
மலைபடுகடாம் என்பது மலை தரும் ஒலி என்றும் மலையை
யானையாக உருவகித்து அதன்கண் பிறந்த ஓசையை ஆகுபெயரால் "கடாம்" என்று
கூறுகிறார். கடாம் என்னும் சொல்லை இயம்ப என்னும் வினையால் ஓசை என்று
தெரிவிக்கிறார் புலவர். கடாம் என்ற சொல்லாலே முன்னின்ற மலையினை யானையாக
உருவகித்தமையை உணரச் செய்தார். மலைக்கு
யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்ததனால் இப்பாட்டிற்கு
"மலைபடுகடாஅம்" என்று பெயர் கூறினார்
மலைபடுகடாம் என்னும் இந்நூல், அகம் புறம் என்னும்
பொருட்பகுதி இரண்டனுள், புறப்பொருட் பகுதியிலமைந்த பாடாண் திணையில் ஆற்றுப்படை என்னும் துறைபற்றிப் பாடிய
பாடலாகும்.
No comments:
Post a Comment