Friday, October 4, 2013

 
மக்களை அச்சுறுத்தும் கல்குவாரி

உரிமத்தை ரத்து செய்யக் கோரி

கிராம மக்கள் பேராட்டம்

திருவண்ணாமலை அக் 4


             



திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் மக்களை அச்சுறுத்தும் விதமாக கல் குவாரி ஒன்று செய்பட்டு வருகிறது. அந்த கல்குவாரியில் குத்தகை சட்ட விதிகளை மீறி முறைகேடுகளும் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து வாலிபர் சங்கம் சார்பில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, ஐங்குணம் கிராமத்தில் உள்ள மலையை 2009 ம் ஆண்டு முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளுக்கு தனியர் ஒருவருக்கு குத்தகை வழங்கப்பட்டுள்ளது. அந்த மலையை சுற்றி சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் மக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த மலையின் அருகிலேயே மக்கள் வழிபடும் தேவாலயமும், 50 க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. மலையில் உள்ள பாறையை வெடி வைத்து தகர்க்கும் போது, விளை நிலங்களும், வீடுகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் மலையில் உள்ள பாறைகளை உடைக்க சுமார் 100 அடி ஆழத்தில் ராட்சத போர்களை போட்டு அதில் டீசலை ஊற்றி வெடி வைக்கப்படுகிறது. இதனால் அருகில் உள்ள கிணறுகளில் தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குத்தகை உரிம்ம் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மிகப்பெரிய வெடிகள் வைத்து பாறைகளை உடைக்கின்றனர்.  எனவே, மாவட்ட நிர்வாகம் குவாரி உரிமையை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வெள்ளியன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் அர்பாட்டம் நடத்தப்பட்டது. வட்டார தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். 

மாநில தலைவர் எஸ்.முத்துகண்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.வீரபத்திரன், மாவட்ட தலைவர்கள் ஏ.லட்சுமணன், எம்.சிவக்குமார், எம்.பிரகலநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 18 ந்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் தனி நபர்களுக்கு மலை, பாறை ஆகியவற்றை வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.   
அரசு குத்தகைக்கு விட்ட நிலத்தை ஏலத்திற்கு எடுத்துக் கொண்டு தனி நபர்கள் கற்களை தங்கள் எல்லைகளைத் தாண்டியும் குத்தகைக் காலத்தைத் கடந்தும் சட்ட விரோதமாக வெட்டி எடுத்து விற்பது நடைபெற்று வருகிறது.  அரசு குவாரிகளுக்குப் பக்கத்தில் குத்தகைதாரர்கள் பெயரில் பட்டா நிலம் இருந்தால்,  அரசு குவாரிகளை முழுவதுமாகச் சுரண்டி அரசு நிலத்தில் எடுத்த கற்களை எல்லாம் பட்டா நிலத்தில் எடுத்ததாகக் காட்டி அரசிற்கு செலுத்த வேண்டிய பணத்தை முடக்குவது,  50 கன மீட்டர் கற்களை வெறும் 5 கன மீட்டர் என்று பொய்க் கணக்கு காட்டுவது, என பல வழிகளில் பணம் பார்த்து, மலைகள், ஏரிகள், ஓடைகளை சட்டத்திற்குப் புறம்பாக வெடி வைத்து பல நூறடிகள் தோண்டி ஆழமான பள்ளத்தாக்குகளாக, பாழ்நிலங்களாக மாற்றப்பட்டு கிடக்கிறது.  குவாரிக்குப் பக்கத்தில் நிலமோ, குடியிருப்புப் பகுதியோ இருக்கும் பட்சத்தில் குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பெரிய பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டு, கிராம மக்களுக்கு இடையூராக அமைவதும் நடைபெற்று வருகிறது. 

இதை கண்டறிய வேண்டிய உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் கண்டும் காணாமல் உள்ளனர். குத்தகை சட்ட விதிகளின் படி குடியிருப்புப் பகுதியைச் சுற்றி 300 மீட்டர் தொலைவிற்குள் எந்த குவாரியும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால்,   பாறைகளில் வெடி வைப்பதினால், ஏற்படும் அதிர்வுகளால் வீடுகளில் கீறல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலை ஏற்படும். மேலும், பாறைகளை வெட்டி எடுக்கும் போது ஏற்படும் மண் துகள்கள் தூசிகள் வீடுகளிலும் விளை நிலங்களிலும்  படிந்து பாழ்படுத்தும், அது மட்டுமின்றி பல்வேறு வியாதிகளை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உண்டாக்கும்.  குவாரிக் கழிவுகள் பாசனக் கிணறுகளிலும், ஓடைகளிலும், படிந்து  நீர்பாசானப் பாதை அடைபடும் ஆபத்துகளும் ஏற்படும் என்பதே உண்மை. எனவே, மக்கள் வாழ்விந்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் குவாரிகளை ஆய்வு செய்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



No comments:

Post a Comment